People Facing Problem – Enthiran Shooting In Heavy Traffic Areas
ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.
ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் இங்குமாக நடந்து வருகிறது.
சமீபத்தி்ல் மதுரவாயல் பகுதியில் உள்ள பிரமாண்ட மேம்பாலத்தில் ஷூட்டிங் நடந்தது. அப்போது போக்குவரத்தை அடைத்துக் கொண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்த நிலையில் இன்று காலை கத்திப்பாரா மேம்பாலத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
படப்பிடிப்புக்காக போலீஸ் உடையணிந்த நூற்றுக்கணக்கான செக்யூரிட்டி நிறுவன ஆட்களும், படப்பிடிப்புக்காக வந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் பாலத்தின் அருகே குவிந்திருந்தனர்.
காலை 9 மணியளவில் நடந்த இந்த படப்பிடிப்பால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பை பார்க்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டதாலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மேம்பாலத்தின் மீது செல்லவோ, வாகனங்கள் வரவோ முடியாத அளவுக்கு முற்றிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. இதனால் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டியோர், விமான நிலையத்திலிருந்து நகருக்குள் செல்ல விரும்பியோர் என அனைத்துத் தரப்பு வாகனங்களும் எங்கும் போக முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றன.
இந்த நிலையில், இடைவெளியில் புகுந்து செல்ல முயன்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை அங்கே நின்று கொண்டிருந்த போலீஸ் உடையணிந்த செக்யூரிட்டிகள் விரட்டியடித்தனர். அவர்களை இங்கே போ, அங்கே போகாதே என்று மிரட்டியதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
போலீஸ் உடை அணிந்ததே தவறு, இதில் பொதுமக்களை மிரட்டும் வகையில் அவர்கள் பேசியது மிகப் பெரிய சட்டவிரோத செயல் என்பதால் பொதுமக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்ததுடன் கோபமும் கொண்டனர். ஆனால் இதைத் தட்டிக் கேட்காமல் நிஜ போலீஸார் கண்டும் காணாததும் போல இருந்தது மக்களை வேதனைக்குள்ளாக்கியது.
ஏன் இந்த அவலம்…?
பொதுவாக வாகன நெருக்கடி நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்புக்கு பகல் நேரத்தில் அனுமதி வழங்கப் படுவதில்லை. இரவு நேரங்களில் தான் அத்தகைய இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த காலை நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எந்திரன் ஷூட்டிங் சென்னையில் நடக்கும் இடமெல்லாம் மக்களை வதைக்கும் செயல் தொடருவதும் அவர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் படப்பிடிப்பு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் மிரட்டப்பட்டனர். அவர்களது கேமராவை பிடுங்க ஒரு கும்பல் விரட்டியது. இதை படமெடுக்க கூடாது என்று அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலுக்கு இடையே வாகன நெருக்கடியை புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர்.
இப்படி பொதுமக்களையும், பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களையும் எந்திரன் பட யூனிட்டார் ரவுடிகள் போல செயல்பட்டு அச்சுறுத்தியது, மிரட்டியது பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
Me too suffered because of this shooting
usually in every cinema shooting it normally occurs its not any one’s fault its because of rajini ,people are crowded ,eager to see him from long view…..